தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
படிப்படியாக குறைவு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட நலமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால், தொற்றில் இருந்து மீளலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து மருத்துவமனைகளிலும், கோவிட் நோயாளிகள் இல்லாத சூழ்நிலை விரைவில் உருவாகும் என்றும் மா. சுப்பிரமணியன் கூறினார்.
கையிருப்பில் உள்ளது
பாரபட்சமின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சம அளவில் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்த மா. சுப்பிரமணியன், ஜூன் மாதத்திற்காக 42 லட்சம தடுப்பூசிகளில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வந்துள்ளதாகவும், தற்போது 6.5 லட்சம் டோஸ் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். இன்னும் 4 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.