வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிக கனமழை பெய்யும்
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட கடலோர மாவட்டங்களில் 2ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனக் கூறியுள்ள ஆய்வு மையம், தென் தமிழக கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க்கடல், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
புதிய புயல்
இதற்கிடையே, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த காற்றுழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்கும். ‘யாஷ்’ என பெயரிடப்பட்டு இந்தப் புயல், வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் மையம் கொண்டு தீவிர புயலாக மாறும். பின்னர் இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கும். காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கிய பின்னர் ‘யாஷ்’ புயல் மேற்கு வங்கம் – ஒடிசா நோக்கி நகரும். 26-ந் தேதி மாலை மேற்கு வங்கம் – ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.