கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் பெருக்கெடுத்து வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பொது முடக்கத்தினை அமல்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை 14 லட்சத்தை தாண்டி உள்ளது. 2.07 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் இதுவரை 9,271 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசு ஏற்கனவே ஊரடங்கை அமல்படுத்தியது. கடந்த மே 5-ம் தேதியில் இருந்து மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.