கொரோனாவை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபலங்கள் நன்கொடை
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சிவக்குமார் தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், வெற்றிமாறன், நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.
ரஜினிகாந்த் நிதியுதவி
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ரஜினிகாந்த், ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.