தமிழகத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜனை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பதுக்கல்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமான மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிச் செல்கின்றனர். மக்களின் தேவையை அறிந்த சிலர் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

முதல்வர் எச்சரிக்கை

இந்த நிலையில், மக்களின் உயிர் காக்கும் ரெம்டிசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கியும், கள்ளச்சந்தையிலும் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி மக்களின் உயிரை காப்பதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி, மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகள் வருவதாகவும், பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றம் எனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குண்டாஸ்

தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு தனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களை உயர்த்தி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here