இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
மறைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான மருந்துகளை உட்கொண்டுவந்த நிலையில், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை உடல்நிலை திடீரென மோசமானதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்றிரவு தா.பாண்டியனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இன்று காலை 10.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
மூத்த தலைவர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932ம் ஆண்டு பிறந்தவர் தா.பாண்டியன். மாணவர் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியை துவக்கிய தா.பாண்டியன், பத்து ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்த்துள்ளார். 8 நூல்கள் மற்றும் 6 மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். தா.பாண்டியனின் மேடைப்பேச்சு, பொதுவுடையரின் வருங்காலம் போன்ற நூல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இரங்கல்
தா.பாண்டியனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.