வேலையின்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்காக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
அமைச்சரின் புதிய முயற்சி
கொரோனா ஊரடங்கு காலத்தின் போது பல்வேறு நிறுவனங்கள் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஏராளமானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். மேலும் படிப்பு முடித்த இளைஞர்கள் பலரும் வேலையின்றி அவதிப்படும் சூழலும் நிலவுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியுள்ளார். 150 தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து அந்த நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்துகொள்வதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறவும் வசதியாக வேலை வாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
அதன்படி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், சென்னையில் வரும் 27ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை இலவச வேலைவாய்ப்பு முகாம் ராயபுரத்தில் உள்ள துாய பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 27ம் தேதி நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும் இந்த முகாமினை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் துவக்கி வைக்கிறார். இதில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கல்வி சான்று, புகைப்படம் மற்றும் ஆதார் நகலுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம் எனவும் பணிக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.