ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களது விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைய லாம் என ரஜினி மக்கள் மகன்றம் அறிவித்துள்ளது.
ரசிகர்கள் போராட்டம்
ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் அதிரடியாக அறிவித்து, அரசியல் களத்தில் பரபப்பை ஏற்டுத்தினார். பின்னர் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ‘வா தலைவா வா’ என்ற கோஷத்தை முன்வைத்தும் அவரது ரசிகர்கள், ரஜினி வீட்டிற்கு முன்பும், சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி ரஜினி அறிக்கை வெளியிட்டார்.
வேறு கட்சியில் இணையலாம்
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என்ற அறிவிப்பை ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் நிர்வாகி வி.எம். சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம்போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.