கேரளாவில் ரிசார்ட்டில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணை, கைது
கன்னட திரையுலகில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய விவகாரம், கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே கேரளாவைச் சேர்ந்த சிலர் சம்பந்தப்படுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக கேரள மார்க்சிஸ்ட் தலைவர் மகன் பினீஷ் கொடியேறி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நடிகை கைது, பரபரப்பு
இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வாகமண் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் போதைப் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ரிசாட்டிற்கு விரைந்த போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பவுடர் உள்பட 7 வகையான போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த போதை விருந்தில் மலையாள சினிமாவைச் சேர்ந்த இளம் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள இருந்ததாகவும், போலீசாரின் அதிரடி சோதனை குறித்த தகவல் அறிந்து அவர்கள் பார்ட்டிக்கு வராமல் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த போதை விருந்திற்கு ஏற்பாடு செய்ததாக தொடுபுழாவை சேர்ந்த அஜிமல் ஜாகீர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகை பிரிஸ்டி பிஸ்வாஸூம் ஒருவர். சில மலையாள படங்களில் நடித்துள்ள இவர், விளம்பர படங்களிலும் மாடலிங் செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். போதைப் பொருள் விவகாரம் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.