நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர் – நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
விபரீத முடிவு
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந் தேதி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தற்கொலை குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் தாய் – தந்தை, ஹோட்டல் ஊழியர்கள், இறுதியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து 6 நாட்கள் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ஹேம்நாத் மற்றும் சித்ராவுக்கு சொந்தமான செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்து விசாரணை நடத்தியதில், பல்வேறு தகவல்கள் வெளியானது.
விசாரணை, கைது
இதன் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டார். சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகி இருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சித்ராவின் தாய் – தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று ஹேம்நாத்தின் தாய் – தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக ஹேம்நாத்தை நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிக்கு ஆர்.டி.ஓ. கடிதம் அனுப்பியுள்ளார். இதனை ஏற்று சிறைத்துறை அதிகாரிகள் நாளை ஹேம்நாத்தை, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.
நடிகர் – நடிகைகளிடம் விசாரணை?
இதற்கிடையே, சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர் – நடிகைகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹேம்நாத்திடம் நாளை காலை விசாரணை நடத்தப்பட்ட பிறகு சித்ராவின் நெருங்கிய தோழிகளாக இருந்த நடிகைகளிடமும் அவருடன் நடித்த சக நடிகர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு அதுதொடர்பான அறிக்கையை ஆர்.டி.ஓ. தாக்கல் செய்ய உள்ளார். அப்போது சித்ரா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து தெரிய வரும்.