மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து, ரஜினியுடன் இணைந்து களமிறங்க தயாராக உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தீவிர பிரச்சாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று முன்தினம் மதுரையில் தொடங்கினார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 2-வது நாளான நேற்று தேனியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்தார்.
தடுப்பது ஏன்?
அப்போது பேசிய கமல்ஹாசன், மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து, ரஜினியுடன் இணைந்து களமிறங்க தயாராக உள்ளதாக கூறினார். மேலும் அவர் பேசுகையில்; அ.தி.மு.க.,வின் நீட்சியாக இதை சொல்லவில்லை. எம்.ஜி.ஆரின் நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்ஜிஆர்., தி.மு.க.வின் திலகமும் அல்ல. அ.தி.மு.க.வின் திலகமும் அல்ல. அவர் மக்கள் திலகம். எங்களின் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? சென்றால், தடுப்பது ஏன்? ஒவ்வொரு இடத்திலும் எங்களின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. விஸ்வரூபம் என்பது யார் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எதுவும் தடையல்ல
இதனிடையே, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் கமல்ஹாசனுக்கு மாலை அணிவிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவுடன் இணைத்து கமல்ஹாசன் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ’புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர். முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். எதுவும்_தடையல்ல’ என குறிப்பிட்டுள்ளார்.