முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தலைவி’ படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரும்பு பெண்மணி
முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், முதலமைச்சர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இருந்தவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணியாக உலா வந்த அவர், உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மலர்தூவி மரியாதை
இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்காள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
வைரலாகும் புகைப்படம்
திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. அதில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இன்று ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி ‘தலைவி’ படக்குழுவினர், அப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.