தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டாத்தால் பல தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மீண்டும் திறப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதையடுத்து, பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் சினிமா தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படாமல் இருந்ததால், தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். தொழிலாளர்களின் நலன் கருதி தியேட்டர்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு, தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.
ஆர்வமில்லை
இதையடுத்து 7 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அரசு தியேட்டர்களை திறக்க கடும் விதிமுறைகள் அறிவித்திருந்ததால், கடந்த சில தினங்களாக தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளதால், இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும், இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,140 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பெரும்பாலானவையும், தனி தியேட்டர்களில் பல தியேட்டர்களும் இன்று திறக்கப்பட்டது. பல தியேட்டர்களில் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற ரஜினிகாந்தின் சிவாஜி, பாபநாசம், துப்பாக்கி, பிகில், விஸ்வாசம், அசுரன், தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே, திரெளபதி போன்ற படங்கள் திரையிடப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தும் தியேட்டர்கள் எதுவும் நிரம்பவில்லை. இருப்பினும், புதிய படங்கள் ரிலீசாகும்போது இந்த நிலை மாறும் என திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.