தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகியதாகவும், தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலூர் 6 செ.மீ., மானாமதுரை, திருபுவனம் தலா 5 செ.மீ., ராமேஸ்வரம் 4 செ.மீ., மண்டபம் 3 செ.மீ., இரணியல், செய்யூர், ராஜபாளையம், பண்ருட்டி, மேலூர், வீரபாண்டி தலா 2 செ.மீ. மழை பதிவாயுள்ளது.