வளிமண்டல சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26,27,28 ஆகிய மூன்று தினங்களுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணி நாற்றாம்பள்ளி தலா 5 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலா 4 செ.மீ., அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாலங்காடு, ரெட்ஹில்ஸ், நெடுங்கல், பரூர் தலா 3 செ.மீ., திருப்பத்தூர், பள்ளிப்பட்டு, ஆம்பூர், தேன்கனிக்கோட்டை, வடபுதுப்பட்டு தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அக்டோபர் 24, 25 தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த மழை
இதனிடையே, சென்னை மாநகரில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அண்ணா சாலை, பிராட்வே, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், லஸ், சாந்தோம், கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. புறநகர் பகுதிகளின் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.