ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை இன்று தொடங்கியது.

கோர விபத்து

சில தினங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

சிக்னல் பிரச்சனையா?

மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்து, எப்படி நேர்ந்தது என்பது தொடர்பாக, ரயில்வே உயர்மட்ட குழு நடத்திய முதல்கட்ட விசாரணையில், “பகா நகர் பஜார் ரயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது. திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

சிபிஐ விசாரணை

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்து இருப்பதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து ரயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை இன்று தொடங்கினார்கள். 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here