பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கல்லீரல் பிரச்சனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் மனோபாலா இன்று உயிரிழந்தார்.

இயக்குநராக அறிமுகம்

1953 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்த மனோபாலா, 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார். அதன்பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மனோபாலா, காமெடி நடிகர்களுடனும் இணைந்து நடித்து காமெடிகளில் அசத்தி வந்தார்.

தயாரிப்பாளர் மனோபாலா

1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் மனோபாலா. நான் உங்கள் ரசிகன், பாரு பாரு பட்டணம் பாரு, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். எச்.வினோத் அறிமுகம் ஆன சதுரங்க வேட்டை படத்தை தயாரித்தவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட மயில்சாமியின் மறைவை கேட்டு “இனிமேல் எந்த ஒரு பிரபலத்தின் மரணத்துக்கும் செல்லும் சக்தி இல்லை” என்று கருத்து கூறியிருந்தார்.

சோகத்தில் திரையுலகம்

இந்நிலையில் மனோபாலாவின் மறைவு ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இவரது இறப்பு செய்தியை கேட்ட பல முன்னணி நடிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல இயக்குநரும் நடிகருமான அருமை நண்பர் மனோபாலா உடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார். மனோபாலாவின் மறைவால் திரையுலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here