திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எத்தனை தொகுதி

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

ஒதுக்கீடு

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும், நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் விவரம்

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here