பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இயல்பாகவே வந்துவிடும். அதுவும் அக்னி நட்சத்திர வெயில் என்றால் சொல்லவா வேண்டும். வியர்க்குரு வந்தால் உடல் முழுவதும் அலர்ஜி போல் உருவாகி புண்களாக மாறிவிடும். வியர்க்குருவை நீக்க நாம் அனைவரும் விதவிதமான பவுடர் வகைகளை பயன்படுத்துவோம். இனி அதை தவிர்த்துவிட்டு, எளிமையாக வீட்டில் உள்ளதை வைத்து வியர்க்குருவை போக்கும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்…

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சருமத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குருவில் இருந்தும் தப்பிக்க உதவி செய்கிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்தபின், குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் நிச்சயம் வியர்க்குரு பிரச்சனை நீங்கும்.

ஆடை அணிதல்

உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க, கோடை காலங்கள் மட்டுமின்றி எப்போதும் இறுக்கமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதை தவிர்த்தல் நல்லது. மேலும் பருத்தி வகை ஆடைகளை உடுத்துவது உடல் சூட்டை தணிக்கும்.

ஐஸ் கட்டி

வீட்டில் ஃபிரிட்ஜ் வைத்திருப்பவர்களுக்கு எளிதில் வியர்க்குருவை போக்குவதற்கான வழி உள்ளது. அது ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தாங்க. இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு இருக்கும் பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

சந்தனம்

இயற்கையாக கிடைக்கும் சந்தனம் சருமத்திற்கு மிகவும் நல்லது. சந்தனங்கள் தற்போது பவுடர், பேஸ்ட் வகைகளிலும் கிடைக்கிறது. இதில், சந்தன பவுடரை பன்னீருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

வெள்ளரிக்காய்

வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கிவிடும்.

நல்லெண்ணெய் குளியல்

வாரத்தில் ஒரு முறையாவது நல்லெண்ணெய்யை தலை, உடல் முழுவதும் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சியக்காய் போட்டு குளித்தால், வியர்க்குரு மட்டும் அல்லாமல் வேறு எந்த தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜியும் வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here