சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கைக் கதைப் பற்றி நிறைய டாக்குமெண்டரிகள், குறும்படங்கள் வெளிவந்திருக்கும் நிலையில் தற்போது வெப் சீரிஸாக உருவாக உள்ளது.

வீரப்பன்

தமிழக, கர்நாடக, கேரள அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கியவர் வீரப்பன். வனத்துறை மற்றும் காவல்துறையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோரை கொலை செய்ததாகவும், யானைகளை கொன்று சட்டவிரோதமாக தந்தங்களை திருடியதாகவும் வீரப்பன் மீது குற்றச்சாட்டு இருந்தது. சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் சத்தியமங்கலம் காட்டில் தனி ராஜ்ஜியமே நடத்தி வந்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி, ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான சிறப்புக் காவல்படையினரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திரைப்படமான வாழ்க்கைக் கதை

வீரப்பனின் வாழ்க்கை கதையை பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைப்படமாக உருவாக்கினார். கன்னடத்தில் வெளியான அந்தப் படத்துக்கு ‘கில்லிங் வீரப்பன்’ என்ற டைட்டில் வைத்திருந்தனர். பின்னர் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டது. சிவராஜ்குமார், சந்தீப் பரத்வாஜ், பாருல் யாதவ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் சில விருதுகளையும் வென்றுள்ளது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசன், சுபாவின் கதையை ‘சயனைட்’ என்ற பெயரில் இயக்கி புகழ்பெற்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ், வீரப்பனின் வாழ்க்கைக் கதையை கன்னடத்தில் ‘வீரப்பன் அட்டகாசா’ என்ற பெயரிலும், தமிழில் ‘வனயுத்தம்’ என்ற பெயரிலும் இயக்கினார். இந்தப் படத்தில் கிஷோர் வீரப்பனாக நடித்திருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

வெப் சீரிஸாகும் வீரப்பன் கதை

லாக்டவுன் காரணமாக பெரும்பாலான இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் திரும்பி இருக்கின்றனர். அந்த வகையில், ‘வனயுத்தம்’ படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷூம், வீரப்பனின் கதையை வெப் சீரிஸாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த வெப் சீரிஸுக்கு ‘ஹண்டர் ஃபார் கில்லிங்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த வெப் சீரிஸூக்கு, விஜய் சங்கர் இசை அமைக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘ஹண்டர் ஃபார் கில்லிங்’ உருவாக இருக்கிறது. இதுபற்றி இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் கூறுகையில்; ‘வெப் தொடருக்கு சென்சார் இல்லை என்பதால் பல உண்மைத் தகவல்களை வெளிப்படையாகச் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். ‘ஹண்டர் ஃபார் கில்லிங்’ வெப் சீரிஸில் கிஷோர் வீரப்பனாக நடிக்கிறார். சம்பத் உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர். சில இந்தி நடிகர்களிடமும் பேசி வருகிறோம். ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. 12 எபிசோடாக இதை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here